×

நாமகிரிப்பேட்டை அருகே சூறாவளி காற்றுக்கு 2 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து நாசம்: நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரப்பன்சோலை, மெட்டாலா, பெரியகொம்பை ஆகிய பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளின் மைய பகுதியாக உள்ள முள்ளுக்குறிச்சியில் தினந்தோறும் வாழைபழ மண்டி செயல்படுவதால் விற்பனை படுஜோராக நடைபெறும். இதனால் இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, டெ்டாலா, பெரபஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

இந்த சூறைகாற்றுக்கு நாமகிரிப்பேட்டை அடுத்த பெரபஞ்சோலை சூரியன் காடு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் தோட்டத்தில் 2,000 வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இவர் 3 ஏக்கரில் செவ்வாழை மரங்களை நடவு செய்து வளர்த்து வந்தார். முறிந்து விழுந்து நாசமான வாழைகளின் மதிப்பு சுமார் ₹15லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயி சந்திரன் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். செவ்வாழை பழங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் 2300 வாழை கட்டைகளை சுமார் 4 லட்சத்திற்கு ராயக்கோட்டையில் இருந்து வாங்கி வந்து சாகுபடி செய்தோம். ஆட்கள் கூலி, உழவு, உரம் என ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவானது.

தற்போது 10 மாதங்களுக்கு மேல் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. மார்க்கெட் நிலவரப்படி ஒரு வாழைத்தார் ₹600 முதல் ₹700 வரை விலை போகிறது. நேற்று வீசிய சூறாவளிக்காற்றுக்கு 2000 வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது. சுமார் 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.

The post நாமகிரிப்பேட்டை அருகே சூறாவளி காற்றுக்கு 2 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து நாசம்: நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Namagripet ,Namakkal ,Namagiripet ,Uonandangal ,Malikuruchki ,Perapanzole ,Metala ,Periyakomba ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...